ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

கருங்கூந்தலும் கடுக்கனும் - சிறுகதை




(தினமுரசு வாரமலர் டிசம்பர் 21 – 27 , 1997 பத்திரிகையில் பிரசுரமானது)

சிறந்த விவசாயிக்கான பரிசாக ஒரு இலட்சம் ரூபா பணத்தினை வழங்க வங்கியொன்று முன்வந்தது. விவசாயத்தை ஊக்குவித்து, அதில் தன்னிறைவு காணவேண்டுமென்பதில் அவ் வங்கி திடமாக உழைத்தது. இதற்காக மாவட்டந்தோறும் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, அதில் முதற் தரமான விவசாயிக்கு "விவசாய மன்னன்" பட்டமும், ஒரு வார காலத்துக்கு கொழும்பு ஐந்து நட்சத்திர உல்லாச விடுதியில் தங்க வசதியினையும் அந்நிறுவனம் செய்து கொடுத்திருந்தது.

ஒரு இலட்சம் ரூபா பணமும், விவசாய மன்னன் பட்டமும் ஒரு வார கால ஐந்து நட்சத்திர உல்லாச விடுதியில் தங்கும் அதிஷ்டமும் கிராமத்து வாசனையை முகர்ந்த கந்தசாமிக்கே கிடைத்திருந்தது, பணமும், பட்டமும் பெரிதாக கந்தசாமிக்குத் தெரியவில்லை. மாநகரில் சிறப்பாக ஒரு வார காலத்தை, அதுவும் தாஜ்சமுத்ராவில் களிக்கப் போகின்றோமே எனும் சந்தோசமே அவரிடம் மேலோங்கி நின்றது.

நிறுவனத்தாரின் அழைப்பை ஏற்று கொழும்பிற்கு வந்து ஹொட்டல் தாஜ்சமுத்ராவில் தங்கினார் கந்தசாமி. அங்கும் அவருக்கு அமோக வரவேற்பு, பாடசாலைக் கற்றலை சரிவரப் புசித்தமையினால் ஆங்கிலத்தில் தடங்கலின்றி பழக முடிந்தது. என்றாலும் கொழும்பு நாகரீகம் தெரியாத ஒன்றாகவே "விவசாய மன்னன்" கந்தசாமிக்குத் தென்பட்டது. கந்தசாமியின் கண்களுக்கு தாஜ்சமுத்ராவில் இருந்த அனைவரும் விசித்திரமானவர்களாகவே தென்பட்டனர்.

விடுதி முற்றத்தில் இருந்த புற்தரையில் அமர்ந்த வண்ணம் இயற்கையின் இரசனையை சுவைக்கலானார் கந்தசாமி, அவ்வேளையில் அவசரமாக சூ... கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், அருகில் இருந்த சலகூடத்தை நாடினார் கந்தசாமி.

அங்கேயுள்ள அறிவிப்புப் பலகையில் "பெண்கள்" எனக் காட்டப்பட்டிருந்தது, மறுபக்க வாசலில் எந்தப் பிரிவினருக்கானது என்று எந்தவித அறிவித்தலும் காணப்படவில்லை. கந்தசாமியின் நிலை தர்மசங்கடமாகி விட்டது, "இதுவும் பெண்கள் பகுதியாக இருக்குமோ...»» " என்றாலும் துணிவை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்றார், பாவம் அங்கேயும் பெண்கள் கூட்டம்.

நீளமாக வளர்ந்த கூந்தல், சிவப்பு நிறக் கவுண், காதிலே தோடு..... கந்தசாமிக்கு அதிர்ச்சி, மன்னிப்புக் கோரிவிட்டு பின்வாங்கினார். வந்த வழியே சென்று வாயில் காவலனிடம் "ஆண்களுக்கான சலகூடம் எங்குள்ளது" எனக் கேட்டார், காவலன் காட்டிய திசை , முன்னர் சென்று திரும்பிய சலகூடத்தையே காட்டியது, கௌரவப் பிரச்சனை காரணமாக எதுவுமே திரும்பப் பேச முடியாமல் அந்தத் திக்கை நோக்கி நடந்தார் கந்தசாமி.

சலகூட வாசலில் சிவப்பு அங்கியணிந்த குழுவினர் இசைக் கருவிகளைக் கையில் ஏந்திய வண்ணம் கூடி நின்றனர், அவர்களுக்கு அருகில் சென்று, சலகூட வாயிலை எட்டும் போது தான் கந்தசாமிக்கு புரிந்தது, இவர்கள் பெண்களல்ல கூந்தல் வளர்த்த, கடுக்கன் பூண்ட நாகரீமான ஆண்களென்பது, பாவம் நாகரீகம்.

( தினமுரசு வாரமலர் டிசம்பர் 21 – 27 , 1997 பத்திரிகையில் பிரசுரமானது )

www.vaanavarkhon.net.tc

கருத்துக்கள்

பூச்சரம் Tamil Thiratti Thiratti.com Tamil Blog Aggregator More than a Blog Aggregator !!!####!!!¤¤¤!!!###!!! அந்தகார இருளில் ஒளிக் கீற்றைக் கொடுப்பவன் தான் அறிவாளி ! மாறாக இருளைச் சபித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் மட்டுமன்றி சோம்பேறியும் கூட !!

முந்திய படைப்புகள்

Related Posts with Thumbnails