செவ்வாய், 8 நவம்பர், 2011

படுவான்கரை - சிறுகதை

"படுவான்கரை பதினொரு கிராமங்களுக்கும் கேட்கும் இரட்டு மேளச் சத்தமும், மணியோசையும் கேட்டு வெகு நேரமாகப் போயிட்டு, இன்னமும் மாவிலங்கமுனைத் துறையடிக்கு மீன் பிடிக்கப் போக, கூ.....போடும் சத்தத்தைக் காணல்லையே" யோசித்தவாறு பாக்கை வெட்டி வெற்றிலைக் குட்டானுக்குள் திணித்தவாறு முற்றத்தில் குந்தி இருந்தான் குறத்திகந்தன்.

"சாச்சோ......" தூரத்தில் சத்தம் கேட்டதும் வலையைத் தூக்கி தோளில் போட்டவாறு வெளியேறி சந்தியில் நின்று கொண்டிருந்த கும்புறுகந்தனைப் பார்த்து, "என்ன மச்சான் விளாவெட்டுவான்கந்தனும், சலவைக்கந்தனும் வரல்லயா?"

கும்புறுகந்தன் மீண்டுமொரு தரம் "சாச்சோ...." எனக் கூவியதும், தூரத்தே இரண்டு சத்தங்கள் கூ...., கூ........ வெனக் கேட்டன. "ஆ... துறயடியில நிக்கிறாங்க போலத் தெரியுது, போவம்....." என்றவாறு மாவிலங்கமுனைத் துறையடிக்கு சென்றனர்.

நான்கு பேரும் ஆற்றில் இறங்கி கறிக்கு மீன் பிடித்து விட்டுத் திரும்பினர். "சாச்சா நீங்க முடிஞ்சி தந்த அத்தாங்கு பிஞ்சி போச்சி, புதுசொண்டு முடிஞ்சு தரணும்....." குறத்திகந்தனைப் பார்த்துக் கேட்டான் கும்புறுகந்தன். "வயலுக்குப் போற வேலயும் இரிக்கி, நேரமிருந்தா செஞ்சி தாறன்."

"வெள்ளாம வட்ட வேலயெல்லாம் முடிஞ்சு யோயித்து, மாடுகளைப் பாக்கிற வேல தான் இரிக்கி, முதியான் நாம்பனுகளை பாத்து விக்கணும், நாகுகளுக்குக் குறி வெய்க்கவுமில்ல, பஞ்சாங்கத்தில நல்லதா ஒரு நாளப் பாத்து மாடுகளுக்கு குறி வெச்சி வந்திரணும், பொறகு மாடுகள் மாறுப்பட்டா ஒண்டுஞ் செய்யேலது, நான் காலயடிக்குப் போகப் போறன் வாறண்டா வாங்க...." என விளாவெட்டுவான்கந்தன் குறத்திகந்தனைப் பார்த்து கேட்டான்.

"மாட்டுக்கு குறி வெய்க்க நல்ல நாளாம் இண்டைக்கு, பூரண எண்டதால நானும் காலயடிக்குப் போய் மாட்டுக்கு குறி வெய்க்கப் போறன், பால இண்டைக்கு பால்காறனிட்ட குடுத்தனுப்புறன், கொண்டு வாற பாலக் காச்சி பெரிய சட்டியில ஊத்தி உறையப் போட்டு வை நாகம்மா, நம்மட ஆசுபத்திரி டாக்குத்தர் வேறிடத்துக்கு மாறிப் போறார், நாமும் நன்றிக் கடனுக்கு ஏதாவது குடுக்கத்தானே வேணும்?, தயிர்ச் சட்டியக் குடுப்பம்."

"நேற்றய தயிரெல்லாத்தையும் முல்லக்காரன்ட பொஞ்சாதிட்ட குடுத்து காத்தாங்குடியில வித்திட்டு வரச் சொல்லல்லையா...." என்று குறத்திகந்தன் மனைவியிடம் கேட்கலானான். "..... நேற்று ஊர்காவல் படைய சுட்டதால அங்கிட்டுப் பக்கம் ஆருமே போகல்ல, அது தான் தயிரெல்லாம் அப்படியே கிடக்கு" என்றாள் நாகம்மா.

"தலயில வெச்சி காத்தாங்குடிக்கு தூக்கி போறண்டா எவ்வளவு கக்கிசம், பாவம் பொன்னம்மா நேத்து களுவாஞ்சிக்குடிக்கு போய், போகேலாம திரும்பி வந்திட்டாள், பஸ் ஓட்டமும் இல்லையாம், கடையெல்லாம் அடச்சிக் கிடக்காம், ரோட்டெல்லாம் ஆமிக்காரண்டா வாகனம் தான் போகுதாம்"

"கொத்தியாவலயில இருந்து மாவிலங்குமுனைத் துறையால அக்கரப்பட்டு மரம் கொண்டு போக நம்மட அகமது காக்காட மகன் இஸ்மாயில் வருவான். அவன் இண்டைக்கு கும்புறுகந்தன்ட ஊட்டுக்குப் போவான், அவனக் கூப்பிட்டு இரிக்கிற தயிரெல்லாத்தயும் குடுத்து விடு. அவன் வரல்லயெண்டால், ஏறாவூரில இருந்து புல்லுப் புடுங்க இந்தப் பக்கம் வாற முஸ்லிம் பொண்டுகளிட்ட குடுத்து விடு நாகம்மா, பாவம் அதுகள் கொண்டு போய்ச் சாப்பிடட்டும், நம்மட ஆக்களுக்குக் குடுத்தா வாங்கவும் மாட்டாங்க, அதுதான் அவயளிட்ட இரிக்கிதே!"

"துறையடிப் பக்கம் வெடிச் சத்தம் கேக்குது!, தண்ணிச் சோத்தையும் தயிரையும் எடு நாகம்மா சாப்பிடுவம்." தண்ணீர்ச் செம்பை எடுத்து கையையும் வாயையும் கழுவியவாறு "சாப்பிட்டுத்து என்ன வெடிச் சத்தமெண்டு பாத்திட்டு வாறன் புள்ள." சோற்றைப் பிசைந்து உண்டு கொண்டிருந்தான் குறத்திகந்தன்.

"சாச்சா இரிக்காரா?" கும்புறுகந்தனின் சத்தம் வேலியோரப் பக்கம் கேட்கவே, "படலையில் இரிக்கிற உழலைய எடுத்து ஓரமா வெச்சிற்று உள்ள வாவன்!" பதட்டமடைந்தவனாக உள்ளே வந்த கும்புறுகந்தன் "மண்முனைத் துறையடியில ஊராக்கள்ற உடுப்புகளத் தோய்த்துக் கொண்டிருந்த
சலவைக்கந்தனை சந்தேகத்தில சுட்டுட்டாங்களாம், ஆசுபத்திரிக்கு ஜீப்பில கொண்டு போறாங்க, நாமளும் போய்ப் பாத்திட்டு நேரத்துக்கு வந்திடுவம்."

(கிழக்கு மாகாணத்தின் படுவான்கரை பகுதியின் பேச்சு வழக்கினைத் தழுவி எழுதப்பட்டது.)

பிரசுரமான திகதி: தினமுரசு வாரமலர் ஏப்ரல் 12 - 18, 1998.




www.vaanavarkhon.net.tc

கருத்துக்கள்

பூச்சரம் Tamil Thiratti Thiratti.com Tamil Blog Aggregator More than a Blog Aggregator !!!####!!!¤¤¤!!!###!!! அந்தகார இருளில் ஒளிக் கீற்றைக் கொடுப்பவன் தான் அறிவாளி ! மாறாக இருளைச் சபித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் மட்டுமன்றி சோம்பேறியும் கூட !!

முந்திய படைப்புகள்

Related Posts with Thumbnails