சனி, 26 டிசம்பர், 2009

அகாலவேளை - சிறுகதை

தலைக் கேசத்தை ஒரு கையால் கோதியவாறு, கழுத்திலே தொங்கவிடப்பட்டிருந்த கைக் கட்டின் வேதனையை மறந்து அழுத முகத்துடன் தாயின் வரவுக்காக ஏங்கிக் காத்திருந்தாள் வசந்தியின் மகள்.

வசதி வாய்ப்பான குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் வசந்தி, கம்பீரமான அழகான கணவனையும் ஆசைக்கு ஒரு மகனையும் ஒரு மகளையும் கொண்ட இனிமையான குடும்பம், சொற்ப காலத்திற்குள் அழகான நவீன வீட்டை நிர்மாணித்து வசந்தியின் மீதுள்ள காதலினால் அவ் வீட்டுக்கு "வசந்த மாளிகை" என நாமமும் சூட்டினான் வசந்தியின் கணவன் வரதன்.

பாடசாலையில் ஒன்றாகப் படித்த காலத்தில் இருந்து இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதியில் காதலாகி களியாணத்தில் முடிந்தது, உற்றார் உறவினர்கள், நண்பர்கள், ஊரவர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டு சிறந்த பாதிரியார்களின் அசீர்வாதத்துடன் பிரமாண்டமாக நடைபெற்றது தான் வரதன் வசந்தி திருமணம்.

திருமணத்துக்கு வருபவர்களை மகிழ்ச்சிபடுத்துவதற்காக இன்னிசைக் கச்சேரியும் உண்ணுவதற்கு சுவையான சிறந்த சிற்றுண்டி மற்றும் உணவுகளெல்லாம் நினைக்கும் போது இப்போதும் நாவூறுகிறது.


"ம்ம்…… எழும்புங்கோ சேர்ச்சுக்குப் போக வேணும்" கணவனைத் தட்டி எழுப்பி அவனது கன்னத்தை மெதுவாக வருடி விட்டு குளியல் அறைக்குள் சென்றாள் வசந்தி. குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்கிறதே, நான் தான் எழும்ப பிந்தி விட்டேனோ, அவசரமாக குளித்து விட்டு குசினிக்குள் சென்று தேநீருடன் வெளியே வந்த போது குழந்தைகளும் கணவரும் புத்தாடை அணிந்து அழகாக இருந்தனர், உண்மையில் அந்த பிரமனுக்கே நன்றி சொல்ல வேண்டும்.

நேற்றைய இரவு நத்தார் தினப் பூசைக்குப் போட்ட உடுப்பை அணிந்து வசந்தியும் குடும்பத்துடன் தேவாலயத்துக்குச் சென்றாள். அன்று ஞாயிற்றுக் கிழமையாகையால் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக இருந்தது.

பூசை ஆரம்பித்து பங்குத் தந்தையினால் அப்பம் பங்கிடப்பட்ட அவ்வேளையில் பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவை நினைத்து கைகளை அகல விரித்து கண்களை மூடி மக்கள் அனைவரும் பிராத்தனையில் ஈடுபடலாயினர், மயான அமைதி நிலவியது அத் தேவாலயத்தில்.

அவ் அமைதி நேரத்தில் பாரிய இரைச்சல் வெளியே கேட்டது, அனைவரும் திரும்பி வீதியைப் பார்க்க, ஊரவர்கள் எல்லோரும் அழுத வண்ணம் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
"கடல் ஊருக்குள்ள வந்திற்று ஓடுங்கோ, ஓடுங்கோ" என அழுதவாறு மக்கள் உடுத்த உடையுடன் ஓடிக்கொண்டிருந்தனர், எதையும் சிந்திக்க நேரம் இருக்கவில்லை.

"வசந்தி கெதியா வா என கணவன் அழைத்ததும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மகளை மறு கரத்தில் பிடித்தவாறு குறு நடையாய் வரதனின் பின்னால் வெளியே செனறாள், தெருவில் கால் வைக்கவே இடமில்லை சன நெரிசல் அளவுக்கு அதிகமாக இருந்தது, சைக்கிளில் ஏறி மிதிக்க தயாராக காத்திருந்தார் வரதன்.

நானும் மகனும் பின்னால் இருக்கும் கரியரிலும், மகள் முன்னாலும் இருக்க சைக்கிள் மெதுவாக நகர்ந்தது, வசந்தியின் வாயில் இருந்து யேசுவே, யேசுவே……. எனும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது, அந் நேரம் பிள்ளையாரே என்றும் முருகா என்றும் ஓடிவரும் ஒவ்வொருவரும் தலையிலடித்து அழுது கொண்டு ஓடுவது இரைச்சலுடன் இரைச்சலாய்க் கேட்டது, பின்னால் திரும்பிப் பார்த்தேன்.

எனது கண்களை என்னால் நம்பவே முடியவில்லை, கடல் மலை போல் எங்களைத் துரத்திக் கொண்டே வந்தது, "அப்பா சைக்கிளை கெதியா மிதியுங்கோ, கடல் பின்னால் வந்துட்டுது, கடவுளே" எனச் சொல்லி வாய் மூடுவதற்கு முன் ... .... ... கடல் எங்களை மூடி விட்டது, கையில் இருந்த எனது குழந்தையை ஒரு கையாலும் மறு கையால் கணவனையும் இறுகப் பிடித்துக் கொண்டேன், எங்களுக்குப் பின்னாய் ஓடி வந்தவர்களின் ஒரு பகுதி கடலலையிலே அடிபட்டுச் செல்வதை உணரத்தக்கதாக இருந்தது.

குழந்தையையும் கணவனையும் இறுகப் பிடித்திருந்த கை நழுவி விட்டதன் பின் நடந்தது எதுவுமே வசந்திக்குத் தெரியாது. கடலலை வசந்தியை தூரத்தே கொண்டு போட்டுச் சென்றது.

தலையிலும் காலிலும் பலத்த வெட்டுக்காயம், அதைப்பற்றி சிந்திக்காமல், அருகே உயிர் தப்பிக் காணப்பட்டவர்களிடையே கணவனையும் குழந்தைகளையும் தேடலானாள், அவர்களைக் காணாததால் கண்டவர்களிடமெல்லாம் விசாரித்தாள். எல்லோரும் பதில் சொல்லக் கூடிய நிலையில் இல்லை, மீண்டும் சுனாமி வந்து விடுமோ எனும் அச்சத்தில் அவசர அவசரமாக கையில் கிடைத்தவற்றுடன் ஓடிக் கொண்டிருந்தனர்.

வைத்தியசாலையில் காயப்பட்ட சிலரையும் இறந்தவர்கள் பலரையும் வைத்திருப்பதாக அறிந்து அங்கு சென்று பார்த்த போது மகள் காயத்துடன் அவசரப் பிரிவில் சேர்க்கப் பட்டிருந்தாள், மனம் சற்று ஆறுதலடைய அன்புக் கணவனையும் ஆசை மகனையும் தேடினாள் வசந்தி, காயப்பட்டவர்களின் பகுதியில் காணப்படாததால் மனதைத் தேற்றிக் கொண்டு மரணித்தவர்களின் பகுதிக்கு ஜடமாகச் சென்றாள், அவளது உள் மனமோ கடவுளே எனக்கு பிரிவு வரக்கூடாது, எனது கணவனும் மகனும் உயிரோடு இருக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தது.

மனித உடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக ஒழுங்கற்றுப் போடப்பட்டிருந்தது, இந்த உடலங்களுக்கு மத்தியில் வரதனையும் குழந்தையையும் எப்படித் தேடுவாள் வசந்தி, அவளும் மெல்லிய மனம் கொண்ட பெண் தானே, மனதைக் கல்லாக்கிக் கொண்டு கிடத்தப் பட்டிருந்த பிணங்களைப் புரட்டிப் புரட்டி தனது உறவுகளைத் தேடினாள். முகம் சிதைந்த நிலையில் கையில் அணிந்திருந்த மோதிரத்தைக் கொண்டு வரதனை அடையாளம் கண்டு ஓவென்று கத்தினாள், மகனின் உடலத்தைக் காணவே இல்லை.

கண்ணீர் அவளையும் மீறி ஓடிக் கொண்டிருந்தது, பைத்தியம் பிடித்தவள் போலானாள், வசந்திக்கு அனுதாபம் தெரிவிக்க யாருமே இல்லை, ஏனையோர்களும் வசந்தியைப் போல் தங்களுக்குத் தேவையானவர்களை அழுதழுது தேடிக் கொண்டிருந்தனர், வசந்தி மனதைத் திடப் படுத்திக் கொண்டாள், தனது இரு கைகளாலும் கண்களைத் துடைத்து விட்டு கணவனின் உயிரற்ற சடலத்தை வாரித் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

மரண வீட்டுக் கிரியை செய்ய நேரமின்றி தனி ஒருத்தியினால் துணிச்சலாக வரதனின் பூவுடல் அவசர அவசரமாக தெரியாத ஒரு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது, இந்தச் சூழலில் மற்றவர்களும் தங்களது இறந்த உறவுகளை கூட்டமாகவும், தனியாகவும் விதைத்துக் கொண்டிருந்தார்கள், நேரமின்மையால் பிரேதங்கள் உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு புதைகுழியில் ஒன்றாக கொட்டப்பட்டு மணலால் மூடப்பட்ட சம்பவங்களும் நடந்து கொண்டிருந்தது.

கணவனின் இழப்பின் பின் வாழ வழி தெரியாமல் திக்குமுக்காடி நிற்கும் வசந்திக்கு துன்ப துயரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன, அழகியான வசந்திக்கு உறவு என்றிருப்பது மகள் ஒருத்தி மாத்திரமே தான், வசதியாக வாழ்ந்த அன்பான குடும்பம் சுனாமியால் தாக்குண்டு சீரழிந்து நிற்கின்றது, குடிசை வாழ்க்கை, பொது மலசல கூடம், பொதுக் கிணறு போன்றவற்றுக்குப் பழக்கப் படுத்திக் கொண்டாள் வசந்தி.

அரசாங்கம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் கொடுக்கும் நிவாரணப் பொருட்களை வாங்கவெனச் செல்லும் போதும் வசந்தியை ஆண் வெறியர்கள் சிலர் சீண்டிப் பார்க்கவும் தவறவில்லை, வக்கிரம் கொண்டவர்களின் காமப் பார்வையில் இருந்து தப்புவதற்காக வசந்தி படும்பாடு சொல்லியடங்காது.

இளம் பெண்ணான வசந்தி விதவையாக இருப்பது பெண் பித்தர்களுக்கு சக்தியூட்டுவதாகவே அமைகின்றது, சிநேகிதம் பிடிக்கவென எத்தனையோ பேர் பின்னால் அலைவது வசந்திக்குத் தெரியாததல்ல.

அவளின் சிந்தனை எல்லாம் காணாமல் போன தனது ஆண் குழந்தையையும், அன்புக் கணவனைப் பற்றியதுமே, வேற்றுச் சிந்தனைக்கு அவளின் மனம் தாவவில்லை, சந்தோசமாக குறைகள் ஏதுமின்றி தன்னையையும் குழந்தைகளையும் வைத்து பாதுகாத்த கணவன் வரதனை நினைக்காத நாளே இல்லை எனலாம், கடல் துரத்தி வந்த அந்த அகால வேளையிலும் எங்கள் உயிரைப் பாதுகாக்க வரதன் பட்ட அவஸ்த்தையை நினைத்து நினைத்து அவளது மனம் படும் கோரத்தை விபரிக்க முடியாது.

"நேரம் பதினொரு மணியாகிற்று வாங்க அம்மா நித்திரை கொள்ளுவம்", மகள் அருகில் வந்து தாயின் கண்களில் வடியும் கண்ணீரைத் துடைத்து அழைத்துச் செல்வாள் நித்திரைக்கு, இது சுனாமி அவளுக்கு கொடுத்துச் சென்ற பரிசில், தினமும் நிகழும் நிகழ்வு இது, அவளது கண்கள் என்ன கடலா,.

மகள் மூன்றாம் தரத்தில் பாடம் படிக்கிறாள், அகதிமுகாமில் இருந்து நூறு மீற்றர் தூரத்தில் தான் அவளது பாடசாலை, வகுப்பில் முதலாம் பிள்ளையும் அவளே. வசந்திக்கு சொந்தமென்றிருப்பது மகள் ஒருத்தி மாத்திரம் தான், அவளை நன்றாகப் படிக்க வைத்துப் பெரிய ஆளாகப் பார்க்க வேண்டுமென்பது வசந்தியின் தற்போதைய இலட்சியம்.

காலையில் மகளை குளிக்க வைத்து சுத்தமான ஆடை அணிவித்து அயலில் உள்ள ஏனைய பிள்ளைகளுடன் மகளையும் பாடசாலைக்கு அனுப்பி வைத்தாள் வசந்தி.

வசந்தி அண்டி.... பக்கத்து குடிசையில் வசிக்கும் அன்னம்மாவின் மகள் கூப்பிடும் சத்தம் கேட்டு வெளியே வந்து வினாவியதைத் தொடர்ந்து மயக்கமுற்றாள் வசந்தி, இடி மேல் இடி அவளது தலையிலே விழுவதாக நினைத்தாள், பாடசாலைக்குச் சென்ற மகள் வீடு திரும்பும் போது தெருவால் வந்த மோட்டார்சைக்கிளில் மோதுண்டு காயப்பட்டு பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட செய்தி மேலும் அவளைப் பாதித்தது!

பஸ் போக்குவரத்து சீரில்லாத இக் கிராமத்தில் இருந்து நினைத்தவுடனே நகரத்தில் உள்ள வைத்தியசாலைக்கு போய் வருவதென்பது இலேசுப்பட்ட காரியமா, அழுதாள் விடியும் வரையும் அழுதாள். சேவல் கூவுகின்றது, மாட்டு வண்டியொன்று கடவென்று போகும் சத்தமும் கேட்கிறது, அகதிக் குடிசைகளுக்கு பொழுது விடிந்ததை தினமும் பறைசாற்றும் கடிகாரங்கள் இவை. அழுதழுது கண்கள் விறைத்துப் போய் நித்திரை இல்லாமல் இருந்த வசந்தி, எழும்பி அடுப்படிக்குச் சென்று கரித்துண்டொன்றை வாயிலிட்டு பல்லை மினுக்கி, முகம் கழுவி வெளியே வந்து அடிவானத்திலுள்ள விடிவெள்ளியைப் பார்த்து மீண்டும் ஒருமுறை நேரத்தை உறுதிப்படுத்திக் கொண்டு அருமை மகளைப் பார்க்க போய்க் கொண்டிருக்கிறாள் தெருவை நோக்கி....

(கடற்கோள் பேரனர்த்ததில் மரணித்த எனது ஆத்ம நண்பன் அ.ஞானேந்திரன் குடும்பத்தினருக்கு இச் சிறுகதை சமர்ப்பணம்)



www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காத்திரமான
பின்னூட்டங்களே
படைப்பிலக்கியத்தின்
கௌரவம் !
www.vaanavarkhon.tk

பூச்சரம் Tamil Thiratti Thiratti.com Tamil Blog Aggregator More than a Blog Aggregator !!!####!!!¤¤¤!!!###!!! அந்தகார இருளில் ஒளிக் கீற்றைக் கொடுப்பவன் தான் அறிவாளி ! மாறாக இருளைச் சபித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் மட்டுமன்றி சோம்பேறியும் கூட !!

முந்திய படைப்புகள்

Related Posts with Thumbnails