வெள்ளி, 23 ஜூலை, 2010

வயலோர நினைவுகள் - சிறுகதை



வயலோர நினைவுகள்


(ஒக்டோபர் 10-16, 1999 தினமுரசு வாரமலர் பத்திரிகையில் பிரசுரமான சிறுகதை)

மோட்டார் சைக்கிளை வீதியால் விரைவாகவும் ஓட்ட முடியுதில்ல, கண்ட கண்ட இடத்தில் எல்லாம் வேகத் தடையும் காணாக்குறைக்கு சோதனைச் சாவடிகளும்........ , மோட்டார் சைக்கிளை மெதுவாக உருட்டிச் சென்று எதிரே நிற்கும் ஆமிக்காரனிடம் அடையாள அட்டையைக் காண்பித்து, அவனின் சைகை கிடைக்கும் வரை காத்து நின்று, அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தேன்.

இன்று ஞாயிற்றுக்கிழமை முருகேசியையும் கூட்டிக் கொண்டு வயலுக்க போயிற்று வருவம். ஆத்தில குளிச்சி எவ்வளது நாளாயிற்று ?

அந்தப் பசுமையான வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை, பசுமையான சூழல் கூடவே இருந்தும் அனுபவிக்கத் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் தானே? அந்த வரிசையில் தான் நானும் இருக்கிறேனோ!

பச்சைப் பசேலென கண்ணுக்கு காட்சி தரும் வயல்வெளியில் தலையைக் குனிந்து காற்றின் சுருதி லயத்துக்கு ஏற்றபடி சாய்ந்தாடும் பொன்னிறமான நெற்கதிர்கள் மனதுக்கு எவ்வளவு நிம்மதியைத் தருகின்றன.

தென்றலுடன் கலந்து வரும் குளிரும், அந்த நேரத்தில் வரம்பில் நடக்கும் போது தடக்கி விழுந்து சேற்றைப் பூசிக் கொள்ளும் நினைவுகளும் விட்டபாடில்லை.

பாலனுக்கு இப்படியொரு கதி ஏற்படுமென்று தெரிந்திருந்தால் அவனைக் கூட்டிக் கொண்டு போகாமல் விட்டிருக்கலாம், அல்லது தென்னந்தோட்டத்துக்குள் இளநீர் குடிப்போமென்று போன எமக்கு களவாகக் கள்ளுக் குடிக்கும் ஆசை ஏற்பட்டு இருக்கக் கூடாது.

சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவனல்லவா பாலன்? இளநீர் கீழே விழுந்தால் உடைந்து விடுமென்று வாயினால் கவ்விக் கொண்டு இறங்கி வந்து பதமாக வெட்டித் தருவானே!

பதினைந்து வருசத்துக்கும் மேலாக வயலில் முல்லைக்காரனாக இருந்தாலும், நண்பனாகவே பழகியவன். கடவுள் இப்படியொரு திடீர் முடிவை எடுத்திருக்கக் கூடாது, இன்னும் எவ்வளவோ காலத்துக்கு வாழ வேண்டியவன், சின்ன வயதில் கலியாணம் செய்ததால் பொம்புளப் புள்ளைகள் மூணுக்குத் தகப்பன் அல்லவா பாலன்? அவன் என்னை ராசேந்திரன் எண்டு கூப்பிடும் குரலோசை அடிக்கடி வந்து போகின்றது.

"ஓசிக் கள்ளென்றபடியால கூடக் குடிக்காதயிங்க, தூக்கிச் சாத்த என்னால ஏலாது!" என்றெல்லாம் பல தடவ கூறியிருப்பானே, அவனுக்கா இந்தக் கதி!

கண்ணி வைத்துக் கொக்குப் பிடித்தெடுப்பதில் கில்லாடி அவனைத் தவிர வேறு ஆரையும் நான் பார்க்கவேயில்ல.

"மச்சான் கதைச்சிக் கொண்டிருங்க, அஞ்சு நிமிசத்தில வந்திருவன்" என நூலால் பின்னப்பட்ட கண்ணி வலைகளை எடுத்துச் சென்று கொஞ்ச நேரத்துக்குள்ளேயே கொக்குகளைப் பிடித்து உரித்தெடுத்து இறைச்சியாகக் கொண்டு வருவான் பாலன்.

"இப்படியே ஒண்டும் செய்யாமக் கதைச்சுக் கொண்டிருந்தா, பாலன் வந்தால் ஏசுவான்!" எனக் கூறி அடுப்பை மூட்டித் தேநீர் வைக்கத் தொடங்குவான் முருகேசு, அத்தோடு கறிக்குத் தேவையான உப்பு, கொச்சிக்காய்த் தூள், வெங்காயம் போன்றவற்றைத் தயார் படுத்தி வைத்திருப்பான்.

அந்த நேரத்தில் எனக்கும் முருகேசுக்கும் இடையே சிரிப்பும் கும்மாளமும் தாராளமாக வந்து போகும், இடையிடையே கேலிப் பேச்சுக்களும், ஊர்க் கதைகளும் எட்டிப் பார்க்கும், சிலவேளைகளில் காதல் கதைகளும் வந்து செல்லும், அதில் கட்டுக் கதைகளுக்கு பஞ்சம் இருக்காது.

இக் கதைவாக்கில் சூடேறி ஒருவரை ஒருவர் துரத்தியோடி, ஒட முடியாமல் வயலுக்குள்ளால் பாய்ந்து ஓடி விழுந்து, சகதியை உடலெல்லாம் பூசி, அருகிலிருக்கும் வாய்க்காலுக்குச் சென்று குளித்து விட்டு வருவது அடிக்கடி நிகழும் சம்பவம்.

கொக்கு வேட்டையை முடித்து, வயலின் வீடான பரணை நோக்கி பாலன் வரும் போது அங்கு அடுப்பு அணைந்து நெருப்பில்லாமல் கிடக்கும்.

கொண்டு வந்த இறைச்சியை தனது கையாலே துண்டு துண்டுகளாக வெட்டி சுவையாகச் சமைத்து, கறிச் சட்டியைப் பறனில் வைத்து விட்டு எங்களைத் தேடி வாய்க்காற் பக்கம் வருவான் பாலன்.

எங்களைக் கண்டதும் "டேய் ராசேந்திரன் அறிவு இல்லையாடா உங்களுக்கு, போன என்னைத் தேடிப் பார்ப்பம் எண்டு இல்லாம விளையாடிக் கொண்டிருக்கிறீங்க!"

எனக் கோபமாக முகத்தைக் காட்டியவாறு வாய்க்காலுக்குள் குதிப்பான் பாலன். குளித்து முடிந்ததும் பறனுக்கு வந்து விட்டால் பழையபடி சிரிப்புத் தொடங்கி விடும்.

மோட்டார் சைக்கிள் பையில் இருந்த போத்தலை வெளியே எடுத்த போது சந்தோசத்தின் உச்சிக்கே சென்று விட்டனர் பாலனும் முருகேசும். கொஞ்சம் கொஞ்சமாகப் பருகி நேரம் போனதே தெரியாமல் உள்ளே இருந்ததை மூவரும் முடித்து விட்டோம்.

வயலுக்குள் கண்ணாடிக் குவளை கிடையாது ஆனால் குவளைக்குப் பதிலாக நன்கு சீவிச் சுத்தம் செய்யப்பட்ட சிரட்டை, அதில் குடிப்பதென்றால் தனியொரு சுவை. "சியஸ்" சொல்லி பாலன் சிரட்டையில் தட்டுவானே அதை நினைத்தால் இப்போது அழுகை தான் வரும்.

பாலன் சமைத்த கொக்குக் கறி எவ்வளவு சுவையாக இருக்குதென்று பாலனைப் புகழ்ந்து கவிதை பாடினான் முருகேசு. முருகேசுக்குப் போதை தலைக்கேறினால் அங்கு கவிதைகளுக்கும் பாடல்களுக்கும் பஞ்சம் இருக்காது.

தண்ணீர் எடுப்பதற்கு வாய்க்காலுக்குச் சென்ற பாலனை, "பாலா பாலா ஓடி வா, இறைச்சிக் கறி சமைப்போம் ஓடி வா!" எனக் கேலியாக அழைத்துச் சிரிப்போம், அச் சந்தோசமான சூழலில் தவழ்ந்து வரும் தென்றல் எங்களைத் தாலாட்டி நித்திரைக்கு அழைத்துச் செல்லும்.

"ராசேந்திரன் எழும்புடா, தண்ணி அள்ளப் போன பாலனை இன்னும் காணல்ல, போய்ப் பார்த்திட்டு வருவம்!" எனக் கூறி என்னைத் தட்டி எழுப்பினான் முருகேசு.

பாலன் சென்ற வழியே போய்ப் பார்த்த போது, வரம்பு ஓரத்தில் விழுந்து உணர்வற்றுக் கிடந்தான் பாலன், அவனது முகம் சேற்றினுள் புதைந்து இருந்தது.

இருவருமாகச் சேர்ந்து பாலனைத் தூக்கி பாதை ஓரத்துக்குக் கொண்டு வந்த போது பாலனின் உயிர் அவன் உடலில் இருக்கவில்லை, அவனுடன் பழகிய வயலோர நினைவுகள் மட்டும் இடைவிடாமல் வந்து போகின்றது.

- யாவும் கற்பனை -



www.vaanavarkhon.tk

கருத்துக்கள்

2 கருத்துகள்:

  1. //இருவருமாகச் சேர்ந்து பாலனைத் தூக்கி பாதை ஓரத்துக்குக் கொண்டு வந்த போது பாலனின் உயிர் அவன் உடலில் இருக்கவில்லை, அவனுடன் பழகிய வயலோர நினைவுகள் மட்டும் இடைவிடாமல் வந்து போகின்றது. //

    வயலோர நினைவுகள் விழியோரம் நீரை வரவழைத்து விட்டது அண்ணா.

    நல்ல கதை.

    http://www.vayalaan.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. நன்றி 'பரிவை' சே.குமார்.

    இக் குறுங்கதை 11 வருடங்களுக்கு முன்னர் பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டது, இருப்பினும் வாசகர் ஒருவரின் நினைவூட்டலின் இணையத்தில் பதிவேறி உள்ளது.

    பதிலளிநீக்கு

காத்திரமான
பின்னூட்டங்களே
படைப்பிலக்கியத்தின்
கௌரவம் !
www.vaanavarkhon.tk

பூச்சரம் Tamil Thiratti Thiratti.com Tamil Blog Aggregator More than a Blog Aggregator !!!####!!!¤¤¤!!!###!!! அந்தகார இருளில் ஒளிக் கீற்றைக் கொடுப்பவன் தான் அறிவாளி ! மாறாக இருளைச் சபித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் மட்டுமன்றி சோம்பேறியும் கூட !!

முந்திய படைப்புகள்

Related Posts with Thumbnails