www.vaanavarkhon.net.tc
திங்கள், 30 ஏப்ரல், 2012
செவ்வாய், 28 ஜூன், 2011
ஊரோடி - கவிதை

ஊரோடி
ஊரவர் பலரின் உயிரைக்
காவு கொண்டவன் தான்
அறங்காவற்குழுவின்
காவலன்!
ஊரின் அழிவுக்கு
வித்திட்டவன் ஊர்தியில் ஊர்வலம்
உயிரைக் கையில் பிடித்தவன்
நடைப்பிணம்!
பல்லக்குத் தேடும் பரதேசி
உதிரக் கறையை அலசி
காற்றுவாக்கில் ஆண்டியாய்
ஊர்உலா!
www.vaanavarkhon.net.tc
கருத்துக்கள்
வெள்ளி, 30 ஜூலை, 2010
வாழ்க்கைத் தேர்வில் - கவிதை

வாழ்க்கைத் தேர்வில்...
(1995 பெப்ரவரி 1- 15 தேதி ஜனனி பத்திரிகையில் வெளிவந்த கவிதை)
உயர்தரம் கற்று
உத்தியோகம் பெற
படிபடியால் ஏறி
தேய்ந்தன கால்கள்!
ஆனால்
இன்னும் நான்
நண்பர்களுக்கு
தேர்வுக் குதிரையாய்!
அடித்தன
அவர்களுக்கு யோகம்
ஆனால்
இன்னமும் நான்!
எனது
நண்பர்களின்
புன்முறுவலுக்கு
அர்த்தம் காணாமல்....
www.vaanavarkhon.tk
கருத்துக்கள்
புதன், 16 செப்டம்பர், 2009
ஆசை... ஆசை... !
ஆணித்தரமாய் பறைசாற்ற விசைந்து
இயலிசை நாடகத்தை ஒத்து
ஈர்ப்புக்கு வழிகோருவதே ஆசை!
# # # # #
உருவமைப்பை உவமானமாக்கி
ஊழிக் காலத்தின் எண்ணமறிந்து
எழுத்துக்கு சார்பெடுத்து இலக்கிய பூமியில்
ஏர் கொண்டுழுவதே ஆசை!
# # # # #
ஐந்திலே அகில மறிந்து
ஒற்றுமையாய் ஒன்றித்து
ஓராயிரம் கவி படைக்க
ஔவை முதுமொழி முகர்வதே ஆசை!
www.vaanavarkoon.tk
கருத்துக்கள்
திங்கள், 14 செப்டம்பர், 2009
கவிஞர்கள்! - கவிதை

கடதாசியில்
கண்டதையும் கீறும்
எழுத்துலக
இலக்கியப் பிரசவிப்பாளர்கள்!
^ ^ ^
கருப்பொருளைக்
களங்கமின்றி
கடுகாகத்
தருபவர்கள்!
^ ^ ^
காலத்தின்
கோலத்துக்கேற்ப
வியாபிக்கும்
கருத்தை
விருப்புடன்
விதைப்பவர்கள்!
^ ^ ^
விளையும் கவியை
வியாபார நோக்கின்றி
வையகத்துக்கு இயம்பும்
வளமான விற்பனர்கள்!
^ ^ ^
www.vaanavarkoon.tk
கருத்துக்கள்
புதன், 9 செப்டம்பர், 2009
எச்சம் - கவிதை

சிவப்பாய்
மனித
மணமுள்ள
மண்!
* * *
சுற்றம்
சூழல்
சகதியாய்ச்
சுடுகாடு!
* * *
வெடிச்
சத்தம்
அருகில்
சப்பாத்துக்
காலரவம்!
* * *
மாலையில்
வல்லூறு
வௌவால்
ஊழையிடும்
நாயொலி!
* * *
குற்றுயிராய்க்
குதறிய
கேட்பாரற்ற
மனிதம்!
* * *
இவை...
* * *
துப்பாக்கி
உமிழ்ந்த
உவகையின்
எச்சங்கள்!
(17 - 23, செப்டம்பர் 1995 தினமுரசு பத்திரிகையின் தேன்கிண்ணம் பகுதியில் பிரசுரமாகியது)
www.vaanavarkoon.tk
கருத்துக்கள்
செவ்வாய், 8 செப்டம்பர், 2009
பிரசவம்! - கவிதை

எழுதுகோலின்
மகவுக்கு
மங்கல
வெளியீடு...!
* * *
புத்தக
இடுக்கிலிருந்து
நலிந்துபோன
படைப்புக்கு
வெள்ளோட்டம்...!
* * *
இருண்ட
வாழ்வின்
அஞ்ஞாதவாச
அரங்கேற்றம்...!
* * *
இடையை
அளக்க
அவையினருக்கு
அரிய சந்தர்ப்பம்...!
* * *
விதவைக்
கடதாசிக்கு
குங்குமப் பொட்டிட்ட
சுமங்கலி
வாழ்க்கை...!
* * *
கலைப் பிரியர்களுக்கு
ஒரு தாயின்
கண்ணீர்க்
காணிக்கை...!
(ஜூலை.02,ஜூலை.08, 1995 தினமுரசு பத்திரிகையில் "தேன்கிண்ணம்" பகுதியில் பிரசுரமாகியது)
www.vaanavarkoon.tk
கருத்துக்கள்
திங்கள், 7 செப்டம்பர், 2009
அம்மா! - கவிதை

ஜனித்ததும்...
எதிர்கால கஷ்டத்தை
பெற்றோருக்கு
உணர்த்தும்
மகவின்
ஒத்திகை ஓசை!
(1995 ஆகஸ்ட் 20 சூடாமணி பத்திரிகையில் பிரசுரமானது)
www.vaanavarkoon.tk
கருத்துக்கள்
ஞாயிறு, 6 செப்டம்பர், 2009
மரண தண்டனை ! - கவிதை
மனிதத்தை நேசித்த
மானுடனுக்கா
நடுத்தெருவில் வைத்து
துப்பாக்கி வேட்டெனும்
மரண தண்டனை!
உண்மையை
உரத்துக் கூற
படிமம்
வகுத்துத் தந்த
சிற்பிக்கா
மரண தண்டனை!
அரைஞாண் கயிற்றால்
நடுவன் ஊடகத்துறைக்கு
கடிவாளமிட்டதால்
கிடைத்த கிரீடமோ
அனாதைப் பிணமெனும்
மரண தண்டனை!
ஊடகவியலாளனுக்கும் அப்பால்
மரித்தவன் மானிடன் என்பதால்
கொலைஞனைக் கண்டிக்க
முள்ளந்தண்டை நிமித்தாத
பத்திரிகையாளர்களே
ஏன் மௌனித்தீர்கள்
உங்களது பேனாக்களுக்குமா
மரண தண்டனை!
புது இராச்சியம் படைத்த
அற்புதனே
உன் பரிணாமத்திலுமா
ஓட்டைகள்
எழுதுகோலுக்கு
செங்குருதி மையிட்டு
சமூகத்துக்கு உருக்கொடுத்த
எழுத்தாளனே
இரத்தம் சிந்துமளவுக்கு
ஏன் உனக்கு
மரண தண்டனை!
கிழித்ததும்
சீறிக் கொள்ளும்
தீக்குச்சாய்
செய்தி சேகரிக்கும்
ஊடகங்களே
உங்களது
குரல்வளை ஓசையையும்
பெட்டிப் பாம்பாக்கியதோ
மரண தண்டனை!
அற்புதனே
மீள் பிறப்பு
நிச்சயமிருப்பின்
எழுத்தாளனாக
மீண்டும் வா
கொலைஞர்களைக்
கழுமரத்தில் ஏற்றி
வழங்கிடுவோம்
மரண தண்டனை!
(2000 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டது)
www.vaanavarkoon.tk
கருத்துக்கள்
சனி, 5 செப்டம்பர், 2009
மீண்டும் எனக்கு! - கவிதை

சற்று நேரம்
உலகத்தை மறந்து
நினைவிழந்து
ஜடமாக
உலாவிய அந்த நாழிகை
மீண்டும் எனக்கு...
* * *
ஜனனம் முதல்
சீராட்டி வளர்த்த
மாமனிதன்
மரணித்த
அச் சேதி காதில்
எதிரொலிக்க
கண்ணீர் வழிவிட்ட
தடத்தில்
வெண்ணிறப்
படிமம்
பிசுபிசுக்க
நாவறண்டு
வாயில் உப்புக் கரிக்க
மீண்டும் எனக்கு...
* * *
வயல் வட்டையில்
ஏர் கொண்டுழுது
சுரி பிசிறி எறிய
மண்வெட்டி கொண்டு
வரம்பு கட்டி
நெல் விதைச்சி
குனிந்த குனி நிமிராமல்
கதிராடாம
வெள்ளாம வெட்டி
கட்டுக் குமிச்சி
வேலக்காரன்
கம்பெடுத்து
சூடடித்துச் சுண பாக்காம
பொலி தூத்தி
பதக்கட
பறக்கவிட்டு
முதலாம் பொலி
கொண்டு வந்து
வீட்டுப் பட்டறையில்
பதமாக வைக்க
பழக்கிய உங்களது நினைவே
மீண்டும் எனக்கு...
* * *
தையில் புதிரெடுத்துச்
சோறாக்கி
முதியான்கண்டெருமைத்
தயிர்
முதலாய்
கறி சமைத்து
சொந்தமுடன் கூடியிருந்து
உண்டு மகிழ்வோமே
அச் சம்பிரதாயச் சடங்கு
மீண்டும் எனக்கு...
* * *
தானாக நாலு பணம்
சம்பாதிச்சு வாழ
வேண்டுமென்பதற்காக
கருங்கல்
உடைப்பது முதல்
வீட்டுத் தோட்டம்
செய்யக்
கற்றுத் தந்து
தொழிலற்ற
இளந்தாரியென
ஊரார் பழிக்கக் கூடாதென
வேலை பழக்கிய
அந்த ரேகை
அழிந்து போன கையே
மீண்டும் எனக்கு...
* * *
மாற்றானி்ன்
தயவில் தொங்கி
வாழாமல்
முன்னேற வழி
கற்றுத் தந்த
அந்தக் கம்பீரக்
குரலோசை
என் காதில்
மீண்டும் எனக்கு...
* * *
நேற்றிரவு கனவில்
வேரோடு சாய்ந்த
மாமரமும்
இலுப்பை மரத்தில்
விட்டு விட்டு முக்கிய
பக்கிளும்
காலையில்
கிணற்றுக் கட்டில்
குந்தியிருந்து கதறிய
அண்டங்காகமும்
சகுனமெனத்
தெரிந்திருந்தால்
மீண்டும் எனக்கு...
* * *
கண்ணீர்
வடிப்பதைத் தவிர
வேறெதுவும்
பிரதியுபகாரமாகச்
செய்ய முடியாத
பாவி நான்
மௌனித்த
உங்கள் ஆத்மாவை
என்றோ ஒரு நாள்
என் ஜீவன்
சந்திக்குமென்றொரு
விதியிருந்தால்
மகனாகப் பிறக்க
ஆண்டவனிடம்
கெஞ்சுகின்றேன்
மீண்டும் எனக்கு...
* * *
(1996.12.08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியான தினகரன் வாரமஞ்சரியின் "கவிதா சாகரம்" பகுதியில் பிரசுரமான கவிதை)
www.vaanavarkoon.tk
கருத்துக்கள்
ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009
வன்னி மக்கள் - கவிதை
வாயைக் கட்டி
வயிற்றைக் கட்டி
தேனீ தேன் சேர்க்குமாப் போல்
சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில்
செதுக்கிய வீட்டுடன்
சொத்திழந்து
உயிரைத் தப்புவிக்க
உண்ண உணவோ
உடுக்க உடையோ யின்றி
நடைப் பிணமாய்
பரதேசியால் அலைந்து
வந்து விழும் வெடிகுண்டில்
சதைப்பிண்டங்கள் சிதிலமடைய
உறவுடன்
கூடவிருந்தவர்களை இழந்து
இலக்கங்களே நாமமென
முகவரியிழந்த மனிதர்களாய்
வானத்தைக் கூரையாக்கி
வாழ நிர்ப்பந்திக்கபட்ட
ஊனமுற்ற உயிரினம்!
www.vaanavarkoon.tk