ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

மரண தண்டனை ! - கவிதை

ஜனநாயகம் காக்கும் நாட்டில்
மனிதத்தை நேசித்த
மானுடனுக்கா
நடுத்தெருவில் வைத்து
துப்பாக்கி வேட்டெனும்
மரண தண்டனை!

உண்மையை
உரத்துக் கூற
படிமம்
வகுத்துத் தந்த
சிற்பிக்கா
மரண தண்டனை!

அரைஞாண் கயிற்றால்
நடுவன் ஊடகத்துறைக்கு
கடிவாளமிட்டதால்
கிடைத்த கிரீடமோ
அனாதைப் பிணமெனும்
மரண தண்டனை!

ஊடகவியலாளனுக்கும் அப்பால்
மரித்தவன் மானிடன் என்பதால்
கொலைஞனைக் கண்டிக்க
முள்ளந்தண்டை நிமித்தாத
பத்திரிகையாளர்களே
ஏன் மௌனித்தீர்கள்
உங்களது பேனாக்களுக்குமா
மரண தண்டனை!

புது இராச்சியம் படைத்த
அற்புதனே
உன் பரிணாமத்திலுமா
ஓட்டைகள்
எழுதுகோலுக்கு
செங்குருதி மையிட்டு
சமூகத்துக்கு உருக்கொடுத்த
எழுத்தாளனே
இரத்தம் சிந்துமளவுக்கு
ஏன் உனக்கு
மரண தண்டனை!

கிழித்ததும்
சீறிக் கொள்ளும்
தீக்குச்சாய்
செய்தி சேகரிக்கும்
ஊடகங்களே
உங்களது
குரல்வளை ஓசையையும்
பெட்டிப் பாம்பாக்கியதோ
மரண தண்டனை!

அற்புதனே
மீள் பிறப்பு
நிச்சயமிருப்பின்
எழுத்தாளனாக
மீண்டும் வா
கொலைஞர்களைக்
கழுமரத்தில் ஏற்றி
வழங்கிடுவோம்
மரண தண்டனை!

(2000 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டது)
www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

3 கருத்துகள்:

  1. ஆழமான கருத்துள்ளக் கவிதை

    //அற்புதனே
    மீள் பிறப்பு
    நிச்சயமிருப்பின்
    எழுத்தாளனாக
    மீண்டும் வா
    கொலைஞர்களைக்
    கழுமரத்தில் ஏற்றி
    வழங்கிடுவோம்
    மரண தண்டனை!//

    Pen is mightier than sword எழுத்தின் பெருமையை சொல்லியிருக்கிறீர்கள் என்றாலும், எழுத்துக்கும் விலை பேசமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.?

    மிக நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஷக்திப்ரபா,

    இலங்கையில் ஊடக தர்மம் நிலைக்க வேண்டும் என்பதற்காக முடியுமானதைப் பதிவோம்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி மிக்ஸ், உங்கள் சேவைக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

காத்திரமான
பின்னூட்டங்களே
படைப்பிலக்கியத்தின்
கௌரவம் !
www.vaanavarkhon.tk

பூச்சரம் Tamil Thiratti Thiratti.com Tamil Blog Aggregator More than a Blog Aggregator !!!####!!!¤¤¤!!!###!!! அந்தகார இருளில் ஒளிக் கீற்றைக் கொடுப்பவன் தான் அறிவாளி ! மாறாக இருளைச் சபித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் மட்டுமன்றி சோம்பேறியும் கூட !!

முந்திய படைப்புகள்

Related Posts with Thumbnails