
சற்று நேரம்
உலகத்தை மறந்து
நினைவிழந்து
ஜடமாக
உலாவிய அந்த நாழிகை
மீண்டும் எனக்கு...
* * *
ஜனனம் முதல்
சீராட்டி வளர்த்த
மாமனிதன்
மரணித்த
அச் சேதி காதில்
எதிரொலிக்க
கண்ணீர் வழிவிட்ட
தடத்தில்
வெண்ணிறப்
படிமம்
பிசுபிசுக்க
நாவறண்டு
வாயில் உப்புக் கரிக்க
மீண்டும் எனக்கு...
* * *
வயல் வட்டையில்
ஏர் கொண்டுழுது
சுரி பிசிறி எறிய
மண்வெட்டி கொண்டு
வரம்பு கட்டி
நெல் விதைச்சி
குனிந்த குனி நிமிராமல்
கதிராடாம
வெள்ளாம வெட்டி
கட்டுக் குமிச்சி
வேலக்காரன்
கம்பெடுத்து
சூடடித்துச் சுண பாக்காம
பொலி தூத்தி
பதக்கட
பறக்கவிட்டு
முதலாம் பொலி
கொண்டு வந்து
வீட்டுப் பட்டறையில்
பதமாக வைக்க
பழக்கிய உங்களது நினைவே
மீண்டும் எனக்கு...
* * *
தையில் புதிரெடுத்துச்
சோறாக்கி
முதியான்கண்டெருமைத்
தயிர்
முதலாய்
கறி சமைத்து
சொந்தமுடன் கூடியிருந்து
உண்டு மகிழ்வோமே
அச் சம்பிரதாயச் சடங்கு
மீண்டும் எனக்கு...
* * *
தானாக நாலு பணம்
சம்பாதிச்சு வாழ
வேண்டுமென்பதற்காக
கருங்கல்
உடைப்பது முதல்
வீட்டுத் தோட்டம்
செய்யக்
கற்றுத் தந்து
தொழிலற்ற
இளந்தாரியென
ஊரார் பழிக்கக் கூடாதென
வேலை பழக்கிய
அந்த ரேகை
அழிந்து போன கையே
மீண்டும் எனக்கு...
* * *
மாற்றானி்ன்
தயவில் தொங்கி
வாழாமல்
முன்னேற வழி
கற்றுத் தந்த
அந்தக் கம்பீரக்
குரலோசை
என் காதில்
மீண்டும் எனக்கு...
* * *
நேற்றிரவு கனவில்
வேரோடு சாய்ந்த
மாமரமும்
இலுப்பை மரத்தில்
விட்டு விட்டு முக்கிய
பக்கிளும்
காலையில்
கிணற்றுக் கட்டில்
குந்தியிருந்து கதறிய
அண்டங்காகமும்
சகுனமெனத்
தெரிந்திருந்தால்
மீண்டும் எனக்கு...
* * *
கண்ணீர்
வடிப்பதைத் தவிர
வேறெதுவும்
பிரதியுபகாரமாகச்
செய்ய முடியாத
பாவி நான்
மௌனித்த
உங்கள் ஆத்மாவை
என்றோ ஒரு நாள்
என் ஜீவன்
சந்திக்குமென்றொரு
விதியிருந்தால்
மகனாகப் பிறக்க
ஆண்டவனிடம்
கெஞ்சுகின்றேன்
மீண்டும் எனக்கு...
* * *
(1996.12.08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியான தினகரன் வாரமஞ்சரியின் "கவிதா சாகரம்" பகுதியில் பிரசுரமான கவிதை)
www.vaanavarkoon.tk
மீண்டும் எனக்கு - இவ்
பதிலளிநீக்குவுலகை காணும் நிலை
வந்திடிலோ - உன்
மக(ள)னாக
நான் மாற
வேண்டும் நீயே
மீண்டும் எனக்கு
எந்தையாக!
அழகு வரிகளில் கவிதை அருமை
என் தந்தையை அணைத்துக் கொண்டேன் உங்கள் வரிகளுக்கூடாக; நான் கூட வேண்டுகின்றேன் நீண்டும் மீண்டும் வேண்டும் என் தெய்வம் என் தந்தையாக! Miss Him So Much
நன்றி கீர்த்தி,
பதிலளிநீக்குஎம்மைத் மனிதனாக்கியது அந்த தெய்வமல்லவா!